வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெங்களூரு மாநகராட்சியில் 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
|வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியில் 79 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநில தேர்தல் ஆணைய கமிஷனர் பசவராஜ் பெங்களூருவில் நேற்று பெங்களூரு மாநகராட்சி தேர்தலையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 243 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கி வரைவு வாக்காளர் பட்டியலை தயாரித்துள்ளோம். அந்த வாக்காளர் பட்டியலை இன்று(நேற்று) வெளியிட்டுள்ளோம். அதன்படி 243 வார்டுகளில் 79 லட்சத்து 8 ஆயிரத்து 394 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 41 லட்சத்து 9 ஆயிரத்து 496 பேரும், பெண் வாக்காளர்கள் 37 லட்சத்து 97 ஆயிரத்து 497 பேரும் உள்ளனர். இந்த வாக்காளர் பட்டியல் வார்டு அலுவலகங்கள், இணை கமிஷனர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் www.bbmp.gov.in என்ற இணையதள முகவரியிலும் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களின் பெயர் பட்டியலில் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும். இந்த வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதாவது ஆட்சபேனைகள் இருந்தால் அதை வருகிற 2-ந் தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். மேலும் தகுதியான புதிய வாக்காளர்கள் தங்களின் பெயரை பட்டியலில் சேர்க்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும்.
இவ்வாறு பசவராஜ் கூறினார்.