< Back
தேசிய செய்திகள்
கோவா: 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி
தேசிய செய்திகள்

கோவா: 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற தலைமை செயல் அதிகாரி

தினத்தந்தி
|
9 Jan 2024 1:11 PM IST

சுசனா சேத் ஓட்டலுக்கு வந்தபோது அவருடன் இருந்த மகன், செல்லும்போது உடன் இல்லாததால் ஓட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பனாஜி,

கர்நாடக மாநிலத்தின் ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுசனா சேத் (வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். சுசனா சேத்தும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு மகன் இருந்தான். இருவரும் கடந்த சனிக்கிழமை வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். நேற்று காலை ஓட்டல் அறையை காலி செய்து விட்டு அவர் டாக்சி மூலம் பெங்களூருக்கு சென்றுள்ளார்.

பின்னர் அவர் தங்கி இருந்த அறையை சுத்தம் செய்ய வந்த பராமரிப்பு ஊழியர் அங்கு ரத்தக்கறைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை பற்றி ஓட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். சுசனா சேத் ஓட்டலுக்கு வந்தபோது அவருடன் இருந்த மகன், செல்லும்போது உடன் இல்லாததால் ஓட்டல் ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஓட்டலில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது சுசனா சேத் தனது மகனுடன் ஓட்டலுக்கு வந்த நிலையில் திரும்பி செல்லும்போது மகனை அழைத்து செல்லவில்லை என்பது உறுதியானது. அதே நேரம் ஓட்டல் பணியாளர்களிடம் விசாரித்தபோது பல தகவல்கள் வெளியாகின.

சுசனா சேத் பெங்களூரு செல்வதற்காக டாக்சி வேண்டும் என ஓட்டல் வரவேற்பாளர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு வரவேற்பாளர் இங்கிருந்து விமான டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவுதான் எனவும், அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அறிவுறுத்திய நிலையிலும் சுசனா சேத், டாக்சியில்தான் பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசார் சுசனா சேத்தை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களது மகன் எங்கே என விசாரித்தனர். அப்போது சுசனா சேத் தனது மகனை நண்பர் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக கூறினார். ஆனால் அவர் கூறிய முகவரியை போலீசார் சரிபார்த்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. இதனால் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர் பயணித்த டாக்சி டிரைவரை தொடர்பு கொண்டு பேசியபோது, கார் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் சென்று கொண்டிருப்பதும், காரில் சுசனா சேத்தின் மகன் இல்லை என்பதும் உறுதியானது. மேலும் கார் டிரைவரை அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு செல்லுமாறு போலீசார் கூறினர். அதன்படி டிரைவர், ஜமங்கலா போலீஸ் நிலையத்திற்கு காரை ஓட்டி சென்றார். அங்கு கோவா போலீசார் கூறியபடி, காரை போலீஸ் அதிகாரிகள் சோதனை செய்தபோது காரில் இருந்த சூட்கேசில் சுசனா சேத்தின் மகன் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சுசனா சேத் தனது மகனை கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்து சென்றது தெரியவந்தது. ஆனால் கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசனா சேத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்