பெங்களூரு குண்டு வெடிப்பு:குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது- கர்நாடக அரசு
|ஓட்டல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்ப்றறி போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்
பெங்களூரு,
பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதற்காக இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. சம்பவம் குறித்து எச்.ஏ.எல். போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் தலைமையில் மர்மநபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றிய நபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு சென்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும், எக்காரணத்தை கொண்டும் குற்றவாளி தப்பிக்க சாத்தியமில்லை என்றும் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். பெங்களூரு போலீஸ் மந்திரி பரமேஸ்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெங்களூரு குந்தலஹள்ளியில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து நமது மாநில போலீசாரே திறமையாக விசாரணை நடத்துவார்கள். ஓட்டலில் வெடித்த குண்டு எந்த மாதிரியானது, எந்த வகை வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது உள்ளிட்டவை குறித்து பரிசீலனை நடத்தி வருகிறார்கள்.. இதுவரை 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டல் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்ப்றறி போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
குண்டுவெடிப்பில் ஈடுபட்ட நபர் அரசு பஸ்சில் தான் ஓட்டலுக்கு வந்து சென்றுள்ளார். எனவே பஸ்சில் உள்ள கேமராவில் மர்மநபரின் உருவம், அவரது நடவடிக்கைகள் தெளிவாக பதிவாகி இருக்கும்.ஓட்டலில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது எந்த பயங்கரவாத அமைப்பு என்பது தெரியவில்லை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் விடுவதில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுஉறுதி. குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது" என்றார்.