பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி; டெல்லியில் காவல்துறை கண்காணிப்பு தீவிரம்
|மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதுடெல்லி,
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவத்தில் ஒரு பெண் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இது தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் காவல்துறையினர் தற்போது கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டுள்ளது.
வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம், சந்தேகத்திற்கு இடமான நபர்களைக் கண்டால் உடனடியாக உள்ளூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், குடியிருப்பு பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் சரியாக வேலை செய்வதை அதன் உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.