என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பதற்றம்
|மேற்கு வங்காளத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தின் கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள பூபதி நகரில் ராஜ்குமார் மன்னா என்பவரின் வீட்டில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி குண்டு வெடித்தது. இதில் ராஜ்குமார் மன்னா உள்பட 3 பேர் பலியாகினர். சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்ததாக கூறப்படும் நிலையில், குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 3 பேருக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து அந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றக்கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கோர்ட்டு என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன்படி ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் என்.ஐ.ஏ. பூபதி நகர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கிழக்கு மேதினிபூர் மாவட்டத்தின் நருபிலா கிராமத்தைச் சேர்ந்த மனோபிரதா ஜனா மற்றும் நினருயா அனல்பெரியா கிராமத்தை சேர்ந்த பலாய் சரண் மைதி உள்பட பலருக்கு தொடர்பு இருப்பதை என்.ஐ.ஏ. கண்டுபிடித்தது. இந்த நிலையில் பூபதி நகர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மனோபிரதா ஜனா வீடு உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில் மனோபிரதா ஜனா மற்றும் பலாய் சரண் மைதியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, கைது நடைமுறைகளை முடிப்பதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பூபதி நகர் போலீஸ் நிலையத்துக்கு செல்ல தயாராகினர்.
அப்போது அங்கு பெண்கள் உள்பட ஏராளமான கிராம மக்கள் திரண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகளின் வாகனங்களை வழிமறித்தனர். அவர்கள் மனோபிரதா ஜனா மற்றும் பலாய் சரண் மைதி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது திடீரென அந்த கும்பல் என்.ஐ.ஏ. அதிகாரிகளை தாக்கியது. இதில் ஒரு அதிகாரி படுகாயம் அடைந்தார். மேலும் அதிகாரிகளின் கார் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பாதுகாப்பு படையினர் உதவியுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.