< Back
தேசிய செய்திகள்
மனைவியின் கள்ளக்காதல்... தாங்கிக்கொள்ள முடியாத கணவன் செய்த கொடூர செயல்
தேசிய செய்திகள்

மனைவியின் கள்ளக்காதல்... தாங்கிக்கொள்ள முடியாத கணவன் செய்த கொடூர செயல்

தினத்தந்தி
|
20 Nov 2023 2:25 PM IST

வீட்டின் கதவை உடைத்து அழுகிய நிலையில் கிடந்த 4 பேரின் சடலங்களை போலீசார் மீட்டனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், கர்தா பகுதியில் உள்ள எம்எஸ் முகர்ஜி சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், அந்த வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை உடைத்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் 4 பேரின் சடலங்கள் காணப்பட்டன. அவற்றை மீட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதுபற்றி காவல் அதிகாரி ஒருவர் கூறியதாவது,

இறந்தவர்கள் பிருந்தாபன் கர்மாகர்(52), அவரது மனைவி தேபஸ்ரீ கர்மாகர்(40), அவர்களது மகள் டெபலீனா(17) மற்றும் மகன் உத்சாஹா (8) என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. பிருந்தாபனின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது, மற்ற மூன்று பேரின் உடல்கள் வீட்டின் வெவ்வேறு இடங்களில் கிடந்தன.

பிருந்தாபன் ஒரு துணி வியாபாரி. அவர் தனது குடும்பத்தினருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

அதனால் வீட்டில் சோதனை செய்தோம். அப்போது, பிருந்தாபன் எழுதிய தற்கொலைக் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதில், தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், அதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும், அதனால்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் எழுதியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்