நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்.. குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி போலீசார் டார்ச்சர் செய்தனர்: குற்றவாளிகள் பகீர் குற்றச்சாட்டு
|கைது செய்யப்பட்ட 6 பேரின் நீதிமன்றக் காவலையும் மார்ச் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நாடாளுமன்ற தாக்குதல் தினமான டிசம்பர் 13ம் தேதி, பலத்த பாதுகாப்பையும் மீறி இரண்டு நபர்கள் மக்களவைக்குள் நுழைந்தனர். பார்வையாளர் மாடத்தில் இருந்து உள்ளே குதித்த அவர்கள் இருவரும், தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த புகைக் குப்பிகளை (கேனிஸ்டர்) எடுத்து வீசினர். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறி அவை முழுவதும் பரவியது. அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மடக்கிப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வெளியே புகை குப்பிகளை வீசி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு ஆண், ஒரு பெண் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் காவல் நிறைவடைந்த நிலையில் இன்று அவர்கள் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களின் நீதிமன்றக் காவலை மார்ச் 1-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் மனோரஞ்சன், சாகர் சர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே, மகேஷ் குமாவத் ஆகிய ஐந்து பேர், காவல்துறை மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவர்கள் கூறியதாவது:-
விசாரணையின்போது போலீசார் எங்களை மிகவும் துன்புறுத்தினர். 70 வெற்று பேப்பர்களில் கையெழுத்துபோடும்படி கட்டாயப்படுத்தினர். உபா சட்டப்பிரிவு மற்றும் தேசிய அரசியல் கட்சிகளுடன் தொடர்பு ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டு கையெழுத்திடும்படி சித்ரவதை செய்தனர். மின்சார அதிர்ச்சியும் கொடுத்தனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.