பீடியை அணைக்காமல் வீசியதால் குடிசையில் தீப்பிடித்து தொழிலாளி கருகி சாவு
|மது போதையில் தூங்கும்போது பீடியை அணைக்காமல் வீசியதால் குடிசையில் தீப்பிடித்து தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் மண்டியாவில் நடந்துள்ளது.
மண்டியா:
மது போதையில் தூங்கும்போது பீடியை அணைக்காமல் வீசியதால் குடிசையில் தீப்பிடித்து தொழிலாளி உடல் கருகி பலியான சம்பவம் மண்டியாவில் நடந்துள்ளது.
மரு அருந்துவார்
மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா சாமனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா. தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இவர் குடிசை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் அவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது அருந்தி உள்ளார். பின்னர், தனது வீட்டிற்கு வந்து இரவில் படுத்துள்ளார். அப்போது அவர் பீடியை புகைத்துள்ளார். அதை முறையாக அணைக்காமல் வீசிவிட்டு அவர் படுத்து தூங்கி உள்ளார். இந்த நிலையில் அவர் அணைக்காமல் வீசிய பீடி, அவரது படுக்கையில் விழுந்தது. இதையடுத்து சிறிது நேரத்தில் படுக்கை முழுவதும் தீ பற்றி எரிந்தது. அவர் மதுபோதையில் இருந்ததால் அவரால் சுதாரித்து கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
அதற்குள் தீ மளமளவென பரவி குடிசை முழுவதும் எரிந்தது. இதில் கிருஷ்ணய்யா உடல் கருகி தீக்காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியினர் ஓடி வந்து குடிசையில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். எனினும், நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு குடிசையில் எரிந்த தீயை கிராம மக்கள் அணைத்தனர்.
பீடியை வீசியதால்...
மேலும், கிருஷ்ணய்யாவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக கிருஷ்ணய்யா உயிரிழந்தார். இதுகுறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மதுபோதையில் இருந்த கிருஷ்ணய்யா, பீடியை முறையாக அணைக்காமல் வீசியதால், குடிசை தீப்பிடித்து, அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.