நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? ராகுல் குற்றச்சாட்டுக்கு ஒவைசி பதிலடி
|கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை காங்கிரஸ் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அதற்கு நான் பொறுப்பு இல்லை என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் வருகின்ற 30 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும், ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால், அங்கு அனல் பறக்கும் பிரசாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, ஓவைசியை கடுமையாக தாக்கினார். ராகுல் காந்தி கூறுகையில், மத்திய பிரதேசம், அசாம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, திரிபுரா என எந்த மாநிலத்தில் நாங்கள் போட்டியிட்டாலும், காங்கிரஸ் - பாஜக நேரடி மோதல் நடக்கும் இடங்களில் அசாதுதீன் ஒவைசி பாஜகவிடம் பணம் பெற்றுக்கொண்டு அங்கு தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துகிறார் என்று பேசினார்.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசாதுதீன் ஒவைசி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கடந்த 2008 -ல் அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து இப்போது வரை நீங்கள் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறீர்கள் அதற்கு நான் பொறுப்பு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.