< Back
தேசிய செய்திகள்
மோடியை கொல்ல தயாராகுங்கள் - மூத்த காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு
தேசிய செய்திகள்

மோடியை கொல்ல தயாராகுங்கள் - மூத்த காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு

தினத்தந்தி
|
13 Dec 2022 4:09 AM IST

பிரதமர் மோடியை கொல்ல தயாராகுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஒருவர் அழைப்பு விடுத்துப்பேசியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் திக்விஜய் சிங் முதல்-மந்திரியாக இருந்தபோது அவரது மந்திரிசபையில் கேபினட் மந்திரி பதவி வகித்தவர் ராஜா பட்டேரியா. இவர் தற்போது மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக உள்ளார்.

இவர் பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் நகரத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் பேசி உள்ளார்.

அந்த கூட்டத்தில் பேசியபோது அவர் கூறியதாவது:-

மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டி விடுவார். மோடி மதம், சாதி, மொழியின் பெயரால் பிளவுபடுத்துவார். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள். அவரை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.

வீடியோ வெளியானது

இதையொட்டிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முன்னாள் மந்திரியே கொல்லுமாறு அழைப்பு விடுத்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பேச்சுக்காக ராஜா பட்டேரியா மீது போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

வழக்கு

மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா நிருபர்களிடம் பேசும்போது, "பிரதமர் மோடிக்கு எதிரான பட்டேரியாவின் பேச்சு கடும் ஆட்சேபத்துக்கு உரியது. இது தொடர்பாக அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

அதன்படி ராஜா பட்டேரியாவுக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விளக்கம்

இதற்கிடையே ராஜா பட்டேரியா தன்னிலை விளக்கம் அளித்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பவாயில் நடந்த கூட்டத்தில் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. நான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன். நான் யாரையும் கொல்ல வேண்டும் என்று கூற மாட்டேன். அரசியல் சாசனத்தையும், தலித்துகளையும், பழங்குடியினரையும், சிறுபான்மையினரையும் பாதுகாக்க மோடியை வீழ்த்துங்கள் என்றுதான் நான் பேசினேன் என்று அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்