< Back
தேசிய செய்திகள்
அதிவேக பொருளாதார முன்னேற்றத்தால் உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவைப் பார்க்கிறது - பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

அதிவேக பொருளாதார முன்னேற்றத்தால் உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவைப் பார்க்கிறது - பிரதமர் மோடி

தினத்தந்தி
|
26 Nov 2022 11:13 PM IST

அசுர வளர்ச்சியாலும், அதிவேக பொருளாதார முன்னேற்றத்தாலும் உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்தியாவைப் பார்க்கிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.

அரசியல் சாசன நாள் கொண்டாட்டம்

நமது இந்திய அரசியலமைப்பு சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் 1949-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய நாள் அரசியல் சாசன நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

மும்பை தாக்குதல் நினைவஞ்சலி

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை கொண்டாடியுள்ள தருணத்தில் அரசியல் சாசன நாள் சிறப்பு பெற்றுள்ளது. அரசியல் சாசனத்தை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் நிர்ணயசபையின் உறுப்பினர்கள் அனைவரையும் தலை வணங்குகிறேன். அவர்கள் நவீன இந்தியாவைப்பற்றி கனவு கண்டவர்கள். கடந்த 70 ஆண்டுகளில், அரசியலமைப்பின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கப்பயணத்தில் நாடாளுமன்ற, நீதித்துறை, நிர்வாகத்தை சேர்ந்த எண்ணற்றோர் பங்களித்துள்ளனர். அவர்களுக்கு நாட்டின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று மும்பை தாக்குதல் நினைவு தினம் ஆகும். 14 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா தனது அரசியல் சாசனத்தை, மக்கள் உரிமைகளை கொண்டாடிய வேளையில், மனித குலத்தின் எதிரிகளால் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மும்பை தாக்குதலில் பலியானோருக்கு நான் நினைவஞ்சலி செலுத்துகிறேன்.

உலகத்தின் கண் இந்தியா மீது....

இன்றைய உலகளாவிய சூழ்நிலையில், ஒட்டுமொத்த உலகின் கண்களும் இந்தியா மீதுதான் உள்ளது. இந்தியாவின் அசுர வளர்ச்சி, இந்தியாவின் அதிவேக பொருளாதார முன்னேற்றம், இந்தியாவின் உலகளாவிய பிம்பத்தின் வளர்ச்சி ஆகியவற்றால் உலகமே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்தியாவைப் பார்க்கிறது. தனது சுதந்திரத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாது என அஞ்சிய ஒரு நாடு, சிதைந்து போகும் என எண்ணப்பட்ட நாடு, இன்று தனது பன்முகத்தன்மையின் பெருமையுடன் முழு பலத்துடன் முன்னேறுகிறது.

இவை யாவற்றின் பின்னணியில், நமது மிகப்பெரிய பலம் அரசியலமைப்புதான்.

திருப்தி

நமது அரசியல் சாசனத்தின் முகவுரையில் எழுதப்பட்டுள்ள "மக்களாகிய நாம்" என்ற வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. "மக்களாகிய நாம்" என்பது அழைப்பு, உறுதிமொழி, நம்பிக்கை. உலகில் ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவின் அடிப்படை உணர்வுதான், அரசியலமைப்பில் எழுதப்பட்டிருக்கிற இந்த உணர்வு ஆகும்.

அதாவது நமது மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுவும், உண்மையுடனும், எளிய நடத்தையுடனும் நிற்பதுதான் அரசின் நடத்தையாக இருக்க வேண்டும். நவீன சூழலில், இந்திய அரசியலமைப்பு, இந்த நாட்டின் கலாசாரம் மற்றும் தார்மீக உணர்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும்.

இன்றைக்கு ஜனநாயகத்தின் தாயாக, நாடு இந்த பழமையான கோட்பாடுகளை, அரசியல் சாசன உணர்வுகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதில் நான் திருப்தி அடைந்துள்ளேன்.

மக்கள் ஆதரவு கொள்கைகள்

இன்றைக்கு மக்கள் ஆதரவுகள் கொள்கைகளால் நாட்டில் உள்ள ஏழைகள், தாய்மார்கள், சகோதரிகள் அதிகாரம் வழங்கப்பெறுகிறார்கள். இன்றைக்கு சாதாரண மக்களுக்காக சட்டங்கள் எளிமைப்படுத்தப்படுகின்றன. நேரத்திற்கு நீதி வழங்க ஏற்ற வகையில் நமது நீதித்துறை தொடர்ந்து அர்த்தம் உள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இன்றும் கூட, சுப்ரீம் கோர்ட்டால் தொடங்கப்பட்டுள்ள மின்னணு முயற்சிகளை தொடங்கி வைக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த தொடக்கத்துக்காகவும். நீதி வழங்குவதை எளிதாக்குவதற்கான முயற்சிகளுக்காகவும் உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த முறை, ஆகஸ்டு 15-ந் தேதி டெல்லி செங்கோட்டையில் நான் சுதந்திர தின உரை ஆற்றும்போது, கடமைகள் பற்றி வலியுறுத்தினேன். இது நமது அரசியலமைப்பின் உணர்வின் வெளிப்பாடு ஆகும்.

மகாத்மா சொன்னது...

மகாத்மா காந்தி, நமது உரிமைகள் நமது கடமைகள். நாம் அவற்றை உண்மையான நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றுகிறோம் என்று சொல்வார். இன்றைக்கு நாம் சுதந்திரம் அடைந்ததின் நூற்றாண்டை நோக்கிய 25 ஆண்டுகால பயணத்தைத் தொடங்கி உள்ளோம். அரசியல் சாசனத்தின் இந்த மந்திரம், நாட்டின் தீர்மானமாக மாறி வருகிறது.

இந்த சுதந்திர அமிர்தம், நாட்டுக்கான கடமை நேரம் ஆகும். அது தனி நபர்களாலும் சரி அல்லது அமைப்புகளானாலும் சரி, கடமைகளுக்குத்தான் நாம் முன்னுரிமை அளிக்கிறோம். நாம் நமது கடமைப்பாதையில் நடந்து, நாட்டைப் புதிய வளர்ச்சியின் உயரங்களுக்கு எடுத்துச்செல்ல முடியும். இன்றைக்கு புதிய வாய்ப்புகள் இந்தியா முன் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு சவாலையும் கடந்து, இந்தியா முன்னோக்கிச்செல்கிறது.

'ஜி-20' தலைமை பொறுப்பு

இன்னும் ஒரு வாரத்துக்குப் பின்னர் இந்தியா, 'ஜி-20 'அமைப்பின் தலைமைப்பொறுப்பைப் பெறப்போகிறது. இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். நாம் இந்தியாவின் ஒரே அணியாக நமது நாட்டின் மதிப்பை உயர்த்துவோம். இந்தியாவின் பங்களிப்பை உலகுக்கு எடுத்துச்செல்வோம். இது நம் அனைவருடைய கூட்டுப்பொறுப்பு ஆகும். நாம் ஜனநாயகத்தின் தாய் என்னும் இந்தியாவின் அடையாளத்தை பலப்படுத்த வேண்டும்.

நமது அரசியலமைப்பில் மேலும் ஒரு அம்சம் உண்டு. அது, இன்றைய இளம் இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், அதைத் திறந்த, எதிர்காலம் மற்றும் அதன் நவீன பார்வைக்கு பெயர் பெற்றதாக வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள். எனவே இயல்பாகவே, நமது அரசியலமைப்பு, இளைஞர்களை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.

இளைஞர்களுக்கு...

இன்றைக்கு அது விளையாட்டாக இருந்தாலும் சரி, புத்தொழில் நிறுவனங்களாக இருந்தாலும் (ஸ்டார்ட்-அப்) சரி, தகவல் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, டிஜிட்டல் பணப்பட்டுவாடாவாக இருந்தாலும் சரி, இளைஞர்களின் சக்தி, தனது முத்திரையை இந்தியாவின் வளர்ச்சியில் பதித்து வருகிறது. நமது அரசியலமைப்பின், நிறுவனங்களின் எதிர்காலமும், இந்த இளைஞர்களின் தோள்களில்தான் இருக்கிறது.

இந்த அரசியல் சாசன தினத்தில், நமது இளைஞர்கள் மத்தியில் அரசியலமைப்பு பற்றிய புரிந்துகொள்ளுதலை அதிகரிப்பதற்காக , அவர்கள் அரசியலமைப்பு பற்றிய விவாதங்களின், ஆலோசனைகளின் ஒரு பகுதியாக மாற வேண்டியது அவசியம் ஆகும். நமது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது, நாட்டின் முன் என்ன சூழ்நிலைகள் இருந்தன, அந்த நேரத்தில் அரசியல் நிர்ணய சபையின் விவாதங்களில் என்ன நடந்தது என்பன போன்ற அனைத்தையும் நமது இளைஞர்கள் அறிந்திருக்க வேண்டும். இது அவர்களுக்கு அரசியலமைப்பின்மீது அவர்களது ஆர்வத்தை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் தொடங்கிய புதிய முயற்சிகள்

இ-கோர்ட்டு திட்டத்தின்கீழ் புதிய முயற்சிகளையும் பிரதமர் மோடி, விழாவில் தொடங்கி வைத்தார். இது வழக்கு தொடுப்பவர்கள், வக்கீல்கள், நீதித்துறையினருக்கு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் கொண்ட கோர்ட்டுகள் மூலம் சேவை வழங்க உதவும்.

பிரதமர் மோடி தொடங்கிய புதிய முயற்சிகளில் இணையநீதி கடிகாரம், ஜஸ்டிஸ் செல்போன் செயலி 2.0, டிஜிட்டல் கோர்ட்டு உள்ளிட்ட இணைய தளங்களும் அடங்கும்.

மேலும் செய்திகள்