பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்; வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி
|பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.
கருத்து வேறுபாடுகள்
பெங்களூரு மாநகராட்சி தேர்தல் தொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் உள்பட அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராகி வருகிறோம். இந்த தேர்தலில் வெற்றி பெற தேவையான வியூகங்களை வகுக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாங்கள் பணியாற்றி வருகிறோம். முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி எழுந்துள்ளது. இதனால் அக்கட்சியில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளன.
மாநகராட்சி தேர்தல்
கட்சியில் உள்ள தலைவர்கள் அனைவரும் கட்சியின் வெற்றிக்காக ஒற்றுமையாக இணைந்து பணியாற்றுவார்கள். மாநகராட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினோம். வார்டு இட ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளோம். பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்.
இட ஒதுக்கீடு
அரசு அதிகாரிகள் வார்டு இட ஒதுக்கீட்டு பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தில் முதல்-மந்திரி இறுதி முடிவு எடுப்பார்.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.