கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை: அமித்ஷாவுடன் ஆலோசிக்க பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்
|கர்நாடகம்-மராட்டியம் இடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக அமித்ஷாவுடன் ஆலோசிக்க இன்று (புதன்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி செல்கிறார்.
பெங்களூரு:
பதற்றம் ஏற்பட்டது
கர்நாடகம்-மராட்டியம் இடையே பெலகாவி எல்லை பிரச்சினை எழுந்துள்ளது. இந்த பிரச்சினை கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நெருங்கும்போது இந்த பிரச்சினை எழுவதும், அதன் பிறகு அமைதியாகி விடுவதுமாக உள்ளது. பெலகாவி கர்நாடகத்தில் உள்ளது. ஆனால் மராட்டிய மாநிலம் பெலகாவியை சொந்தம் கொண்டாடுகிறது. கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த எல்லை பிரச்சினை மீண்டும் எழுந்தது.
கர்நாடக பஸ்கள் மீது மராட்டித்திலும், கர்நாடகத்தில் மராட்டிய வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் இரு மாநிலங்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது. மராட்டிய மந்திரிகள் 2 பேர் கடந்த 6-ந் தேதி பெலகாவிக்கு வருவதாக அறிவித்தனர். இதனால் எல்லையில் இந்த பதற்றம் அதிகரித்தை அடுத்து இரு மாநிலங்கள் இடையே 2 நாட்கள் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. எல்லையில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. அங்கு அமைதி நிலவுகிறது.
முதல்-மந்திரிகள் கூட்டம்
இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை மராட்டிய மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் நேரில் சந்தித்து, இந்த எல்லை பிரச்சினையில் தலையிடுமாறு கோரி கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, அமித்ஷா வருகிற 14-ந் தேதி (இன்று) கர்நாடக-மராட்டிய மாநில முதல்-மந்திரிகள் கூட்டம் நடத்துவதாக உறுதி அளித்துள்ளதாக மராட்டிய மக்கள் பிரதிநிதிகள் கூறினர். இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எல்லை பிரச்சினை குறித்து அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் 14 அல்லது 15-ந் தேதி நடைபெற உள்ளதாக கூறினார்.
இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் கர்நாடகம்-மராட்டிய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கூட்டம் இன்று (புதன்கிழமை) மாலை டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பகல் 1.30 மணிளவில் உப்பள்ளியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மைசூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மறுசீரமைப்பு சட்டம்
கர்நாடகம்-மராட்டியம் இடையே எல்லை பிரச்சினை தொடர்பாக இரு மாநில முதல்-மந்திரிகளின் கூட்டத்திற்கு உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை நான் தெளிவாக எடுத்து கூறுவேன். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம் வந்த பிறகு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அந்த சட்டம் வந்த பிறகு நடந்த விஷயங்கள் குறித்து அனைத்து தகவல்களையும் அந்த கூட்டத்தில் எடுத்து கூறுவேன். அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள், மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டம், எல்லை பிரச்சினை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்தும் விவரங்களை வழங்குவேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
இந்த டெல்லி பயணத்தின்போது, பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க உள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "நான் எல்லை பிரச்சினை குறித்து பேசவே டெல்லி செல்கிறேன். அதன் பிறகு அமித்ஷா மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசினால், அதுகுறித்து ஆலோசிக்கவும் நான் தயாராகவே செல்கிறேன்" என்றார்.
நம்ம கிளினிக்குகள்
டெல்லி செல்வதற்கு முன்னதாக பசவராஜ் பொம்மை இன்று காலை 9.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு செல்கிறார். அங்கு சுகாதாரத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு நம்ம கிளினிக் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இன்று பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 114 நம்ம கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. வருகிற ஜனவரி மாதத்திற்குள் இதன் எண்ணிக்கையை 438 ஆக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.