பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் எப்போது வௌியாகும்?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்
|கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்பதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வேட்பாளர் பட்டியல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சில தொகுதிகளில் போட்டியிட அதிகம் பேர் டிக்கெட் கேட்கிறார்கள். அதனால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று (நேற்று) மாலை எங்கள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் நடக்கிறது. இதில் வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறோம்.
ஒவ்வொரு தொகுதியிலும் யாருக்கு டிக்கெட் வழங்க வேண்டும் என்பது குறித்து கட்சி மேலிட தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தியுள்ளனர். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் வேட்பாளர் பட்டியல் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது. அதன் பிறகே கட்சி மேலிடத்திற்கு பட்டியலை அனுப்பியுள்ளோம்.
இறுதி செய்யவில்லை
கருத்து கணிப்புகள் அடிப்படையில் வேட்பாளரை இறுதி செய்கிறோம். டிக்கெட் கிடைக்காதவர்கள் அதிருப்தி அடைவது சகஜம். எந்த ஒரு தொகுதிக்கும் வேட்பாளரை இறுதி செய்யவில்லை. தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை (இன்று) வெளியாகும். வேட்பாளர் பட்டியல் ஒரே கட்டமாகவோ அல்லது 2, 3 கட்டமாகவோ வெளியிடப்படுமா? என்பது எனக்கு தெரியவில்லை. இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.