'கிராம ஒன்' மையங்களில் இணையதள வேகம் அதிகரிக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
|கிராம ஒன் மையங்களில் இணையதள வேகம் அதிகரிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
கிராம ஒன் மையங்களில் இணையதள வேகம் அதிகரிக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
அரசின் சேவைகள்
கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் கிராம ஒன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டம் தொடங்கி ஓராண்டு ஆவதையொட்டி கிராம ஒன் ஆண்டு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-
எந்த ஒரு பொருளும் அசையாமல் ஒரே இடத்தில் இருந்தால் அது துரு பிடித்துவிடும். அரசின் சக்கரங்கள் நிரந்தரமாக ஓடிக்கொண்ட இருக்க வேண்டுமெனில் அடிமட்டத்தில் மக்களுக்கு அரசின் சேவைகள் கிடைத்து கொண்டே இருக்க வேண்டும். மக்களின் தேவைகளுக்கு ஏற்ப கிராமங்களில் அரசின் சேவைகள் வழங்கப்படுகின்றன.
சேவை மனப்பான்மை
அரசின் திட்டங்கள் வெற்றிபெற சேவை மனப்பான்மை முக்கியம். மக்கள் பழைய நடைமுறைகள் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர். சட்டத்திற்கு உட்பட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அறிவாற்றல் இருக்கும் இடத்தில் மாற்றங்கள் நிகழும். அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம ஒன் திட்டம் அமலில் உள்ளது. அங்கு வரும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம ஒன் மைய ஊழியர்கள் சிறப்பான முறையில் பணியாற்றுவதாக அறிந்தேன். அதனால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும். மக்களுக்கு எளிதாக சேவைகள் கிடைக்க வேண்டும். இந்த மையங்களில் இணையதள வேகத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கிராம ஒன் திட்டத்தால் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது. கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு அரசின் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் ஆகும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.