< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது என பசவராஜ் பொம்மை, குமாரசாமி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
14 Sept 2023 3:16 AM IST

எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது என்று முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

பெங்களூரு:

எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது என்று முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறை

காவிரி நீர் விவகாரம் குறித்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரிகள் குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஹாசனில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்கூட்டியே திட்டமிடப்பட்டதால் தன்னால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று குமாரசாமி கூறிவிட்டார். அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க பரிந்துரை செய்துள்ளது நியாயமற்றது. காவிரி படுகையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை இருந்த போதிலும் தமிழகத்திற்கு மாநில அரசு நீர் திறந்துவிட்டது. கர்நாடகத்தின் நலனை காக்க இந்த காங்கிரஸ் அரசுக்கு தைரியம், துணிச்சல் இல்லை. மக்களை காக்க இந்த அரசு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவில்லை.

இடர்பாடு சூத்திரம்

வரும் நாட்களில் குடிநீருக்கு என்ன செய்வார்கள்?. எங்கிருந்து பெங்களூரு மக்களுக்கு குடிநீர் கொடுப்பார்கள்?. இதுவரை மழை குறைவாக பெய்யும்போது நீரை பகிர்ந்து கொள்ள இடர்பாடு சூத்திரம் உருவாக்கப்படவில்லை. கர்நாடக மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடக்கூடாது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

எனது தொகுதியில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இருந்ததால், என்னால் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. நேற்று இரவு தான் எனக்கு தொலைபேசியில் அரசு தகவல் தெரிவித்தது. அதனால் அந்த கூட்டத்தை ரத்து செய்ய முடியவில்லை. ஆனாலும் காவிரி பிரச்சினையில் பா.ஜனதாவின் நிலைப்பாடு மிக தெளிவாக உள்ளது.

பயிர் சாகுபடி

எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்கக்கூடாது. கர்நாடகத்தில் உள்ள உண்மை நிலையை சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எடுத்துக்கூற வேண்டும். ஒழுங்காற்று குழுவின் முடிவை மாநில அரசு நிராகரிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையால் தான் காவிரி படுகையில் உள்ள விவசாயிகளை மாநில அரசு பயிர் சாகுபடி செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்