கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் செய்யும் துரோகம் செய்கிறது; பசவராஜ் பொம்மை பேட்டி
|தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ செய்யும் துரோகம் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ செய்யும் துரோகம் என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
மக்களுக்கு காங்கிரஸ் துரோகம்
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து அரசுக்கு எதிராக பா.ஜனதா தீவிர போராட்டத்தில் ஈடுபட உள்ளது. முதலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்படாது என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். ஆனால் தண்ணீர் திறந்துவிட்டனர். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட்டு வந்தால், அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும். முதல்-மந்திரி சித்தராமையா அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்படாது என்று சொல்கிறார்.
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுகிறார். இதன்மூலம் மாநில மக்களுக்கு காங்கிரஸ் அரசு துரோகம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடும் முடிவை அரசு எடுப்பது சரியானது இல்லை.
டி.கே.சிவக்குமாருக்கு தைரியம்...
காவிரி நதிநீர் விவகாரம் குறித்து பிரதமரிடம் பேசுவதற்கு பா.ஜனதாவினருக்கு தைரியம் இல்லை என்று துணை முதல்-மந்திரி கூறி வருகிறார். உண்மையில் டி.கே.சிவக்குமாருக்கு தைரியம் இருந்தால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் முன்பாகவே தண்ணீரை திறந்துவிட்டனர். டி.கே.சிவக்குமாருக்கு தைரியம் இருந்தால், சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையின் போது சரியான வாதங்களை முன்வைத்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் விடுவிப்பதை நிறுத்தட்டும்.
மாநில மக்களின் நலன் மற்றும் உரிமையை அரசு காப்பாற்றட்டும். எந்த ஒரு மாநில எம்.பி.க்களும் பிரதமரை சந்தித்து பேசினாலும், எந்த பிரயோஜனமும் ஆகுவதில்லை. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடப்பதால், அங்கு நம் வாதங்களை முன் வைக்க வேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், கர்நாடக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.