டிஜிட்டல் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
|சைபர் கிரைம் உள்பட டிஜிட்டல் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
சைபர் கிரைம் உள்பட டிஜிட்டல் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தார்வாரில் தடய அறிவியல் ஆய்வு பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
டிஜிட்டல் குற்றங்கள்
நாட்டில் தற்போது புதுவிதமான குற்றங்கள் நடந்து வருகிறது. சைபர் கிரைம், டிஜிட்டல் குற்றங்கள், போதைப்பொருட்கள் விற்பனை போன்றவை அதிகரித்துவிட்டது. இதுபோன்று குற்றங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நமது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், சைபர் கிரைம் உள்பட டிஜிட்டல் குற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க வேண்டும்.
இதற்காக தான் மத்திய அரசு, தேசிய தடயவியல் பல்கலைக்கழகத்தை தொடங்க முன்வந்துள்ளது. தார்வாரில் தடயவியல் பல்லைக்கழகத்திற்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு தடயவியல் ஆய்வகத்தில் இருந்து அறிக்கை கிடைக்க ஆண்டு கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் குற்றவாளிகள் தப்பித்து விடுவதுடன், வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் தாமதம் ஏற்பட்டு வந்தது.
2 தடய அறிவியல் ஆய்வகங்கள்
இதற்காக நான் போலீஸ் மந்திரியாக இருந்த போது, கர்நாடகத்தில் 2 தடய அறிவியல் ஆய்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தேன். பெங்களூருவில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் ரூ.30 கோடி செலவில் அதிநவீனம் செய்யப்பட்டது. நாட்டிலேயே கர்நாடகத்தில் சிறப்பு வாய்ந்த தடய அறிவியல் ஆய்வகத்தை போலீசார் பெற்றுக் கொண்டுள்ளனர். பெங்களூருவில் இருக்கும் தடய அறிவியல் ஆய்வகத்தில் பணியாற்றும் 52 விஞ்ஞானிகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தார்வாரில் தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைய இருப்பது கர்நாடகத்திற்கு மற்றொரு சிறப்பாகும்.
இதற்கு காரணம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆவார். அவருக்கு கர்நாடகம் மீதும், கர்நாடக மக்கள் மீதும் அளவு கடந்த அன்பு உள்ளது. கர்நாடகத்தில் தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டாலும், இதற்கான பயன்கள் மற்ற மாநிலங்களுக்கும் கிடைக்க உள்ளது. இதன்மூலம் வடகர்நாடக மக்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்காக அமித்ஷாவுக்கு கர்நாடக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.