பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு எதிரான பேனர்கள் அகற்றம்
|பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாருக்கு எதிரான பேனர்கள் அகற்றப்பட்டது.
பெங்களூரு:-
எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடந்த நிலையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் 2-வது கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட 25-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களை வரவேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் பெங்களூருவில் அரண்மனை ரோடு முதல் கூட்டம் நடைபெறும் தாஜ்வெஸ்ட் என்டு ஓட்டல் வரை வழிநெடுகிலும் கட்சி தலைவர்கள் படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்மநபர்கள், அந்த பேனர்களுடன் நடுவே நிதிஷ்குமார் மீது குற்றம்சாட்டி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த பேனர்களில், சமீபத்தில் பீகாரில் சுல்தான் கஞ்ச் பாலம் உடைந்து விழுந்த படம் அச்சிடப்பட்டுள்ளதுடன், நிலையற்ற பிரதமர் வேட்பாளர் என்று நிதிஷ்குமார் உருவப்படத்துடன் வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அறிந்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அந்த பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உடனே அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.