கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன - நிர்மலா சீதாராமன்
|கடந்த 5 நிதியாண்டுகளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் நேற்று ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
வங்கிகள் தங்கள் இருப்புநிலை ஏட்டை சரிசெய்யும் விதமாகவும், வரிப்பயனை பெறும் வகையிலும், முதலீட்டை அதிகரிக்கும் வகையிலும் தங்களின் வழக்கமான நடவடிக்கையின் ஒரு அங்கமாக வாராக்கடன்களை தள்ளுபடி செய்கின்றன. வங்கிகளின் நிர்வாக இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்த கொள்கை அடிப்படையிலும், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படியும் இது மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கும் தகவல்படி, கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 511 கோடி வாராக்கடன்களை பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் ரத்து செய்துள்ளன.
வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டாலும் அவற்றை திரும்ப வசூலிப்பதற்கான சட்ட நடவடிக்கை போன்றவை தொடரும்.
வணிக வங்கிகள் கடந்த 5 நிதியாண்டுகளில் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து 36 கோடி வாராக்கடன்கள் உள்பட ரூ.6 லட்சத்து 59 ஆயிரத்து 596 கோடி கடன்களை மீட்டுள்ளன என்று அவர் கூறினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி
மக்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி நித்யானந்த் ராய் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், 'அடுத்து நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பில், சாதி அடிப்படையிலான எண்ணிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பீகார், மராட்டியம் மற்றும் ஒடிசா மாநில அரசுகளும், சில அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் சுதந்திரத்துக்கு பிறகு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் எண்ணிக்கை தவிர, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை' என்று கூறினார்.
16 லட்சம் சைபர் குற்றங்கள்
மந்திரி நித்யானந்த் ராய் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது, 'கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளன. அவை தொடர்பாக 32 ஆயிரத்துக்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சைபர் குற்றம் தொடர்பாக, தேசிய சைபர் குற்றம் புகார் இணையதளமான www.cybercrime.gov.in-ல் எளிதாக புகார் செய்யலாம். அது தானாகவே அந்தந்த மாநில போலீஸ்துறைக்கு அனுப்பப்பட்டு விடும். இதுதொடர்பாக '1930' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்' என்று கூறினார்.
புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, 'நாட்டின் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 2020-ம் ஆண்டில் 13 லட்சத்து 92 ஆயிரத்து 179 ஆக இருந்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கை, நடப்பு ஆண்டில் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல புற்றுநோயால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை இந்த ஆண்டில் 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 ஆக உயர்ந்துள்ளது' என தெரிவித்தார்.