அனைத்து வங்கிகளுக்கும் விரைவில் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை?
|சனிக்கிழமைகள் விடுமுறை காரணமாக, மற்ற தினசரி 5 வேலை நாட்களில் கூடுதலாக 45 நிமிடங்கள் வங்கி செயல்பாடு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதுடெல்லி,
வங்கிகளுக்கு தற்போது வங்கிகள் மாதத்தின் முதலாவது, மூன்றாவது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக உள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறையாக உள்ளது. எனினும், பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ஊழியர் சங்கத்தினர், அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, ஊழியர்களின் கோரிக்கை குறித்து நிதியமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது. இந்த கோரிக்கைக்கு நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இனி வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே, அதாவது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே செயல்படும்.
சனிக்கிழமைகள் விடுமுறை காரணமாக, மற்ற தினசரி 5 வேலை நாட்களில் கூடுதலாக 45 நிமிடங்கள் வங்கி செயல்பாடு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வங்கி ஊழியர்களின் இந்த கோரிக்கை நிதியமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் என சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.