பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் - மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை
|பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என்று காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு,
தேர்தல் பத்திர விவரங்கள் குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. எங்களின் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் உள்ளது. இப்படி செய்தால் தேர்தல் எப்படி நடக்கும்?. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைகளை எதிர்கொண்டவர்கள் பா.ஜ.க.வுக்குச் சென்று கட்சி பதவிகளைப் பெற்றுள்ளனர். மேலும் பா.ஜ.க.வுக்கு சென்றவுடன் அவர்கள் சுத்தமாகி விடுகின்றனர்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் பா.ஜ.க. கட்சிக்கு ஐந்து ஆண்டுகளில் ரூ.6,060 கோடி கிடைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் கணக்கு முடக்கப்பட்டால், அவர்கள் எப்படி தேர்தலில் போட்டியிடுவார்கள். தேர்தல் பத்திர முறைகேடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. எப்படி பணம் சம்பாதித்தது என்பதை சுப்ரீம் கோர்ட்டு இன்று அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும். தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.