இன்று டெல்லி வருகிறார் வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா
|4 நாள் பயணமாக வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று டெல்லி வருகிறார். பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
புதுடெல்லி,
வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா 4 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) டெல்லி வருகிறார். அவருடன் மந்திரிகள், உயர் அதிகாரிகள், வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவும் வருகிறது.
ஷேக் ஹசீனாவை பிரதமர் மோடி வரவேற்கிறார். ஷேக் ஹசீனாவுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அவர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்திக்கிறார்.
டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடிக்கும், ஷேக் ஹசீனாவுக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, முதலீடு, வர்த்தக உறவு, மின்சாரம், எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு, நதிநீர் பங்கீடு, நீர்வள மேலாண்மை, எல்லைப்புற நிர்வாகம், போதைப்பொருள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது.
இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன. நீர் மேலாண்மை, பாதுகாப்பு, ரெயில்வே, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் ஒலிபரப்பு ஆகியவை தொடர்பாக இந்த ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.
ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்யும் வர்த்தக நிகழ்ச்சியிலும் ஷேக் ஹசீனா பங்கேற்கிறார்.