கொல்கத்தாவில் மாயமான வங்காளதேச எம்.பி. கொலை: 3 பேர் கைது
|வங்காளதேச எம்.பி.அன்வருல் அசீம் மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்தார்.
கொல்கத்தா,
வங்காளதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி. அன்வருல் அசீம். இவர் கடந்த 12ம் தேதி வங்காளதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு வந்துள்ளார். பாராநகரில் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்த நிலையில்,14ம் தேதிக்கு பின் அவர் மாயமானார். இது பற்றி போலீசில் வங்காளதேச தூதரகம் புகார் அளித்திருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்த நிலையில்,கொல்கத்தாவில் நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து வங்காள தேச உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கூறுகையில்,
கொல்கத்தாவில் நியூ டவுனில் உள்ள சஞ்சீவா கார்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு செய்த கொலைபோல் தெரிகிறது. எம்.பி. கொலை தொடர்பாக வங்காள தேச போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்திய காவல்துறை இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார்.
அன்வருல் அசீம் மரணம் குறித்து வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா அதிர்ச்சி அடைந்ததாகவும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளதாக வங்காள தேச செய்தி நிறுவனம் கூறியுள்ளது.