துர்கா பூஜையின் போது அனைத்து பூஜை மண்டபங்களிலும் போலீசார் நிறுத்தப்படுவார்கள்: வங்கதேச உள்துறை மந்திரி
|துர்கா பூஜை தொடங்க உள்ள நிலையில் வங்கதேச உள்துறை மந்திரி பாதுகாப்பு குறித்து நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.
டாக்கா:
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமுடன் கொண்டாடப்படுவது வழக்கம்.மேற்கு வங்காளத்தில் அருகில் உள்ள வங்காளதேசத்திலும் இப்பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நிலையில் வங்காள தேசத்தின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அக்டோபர் 1-ம் தேதி தொடங்கும் துர்கா பூஜை விழாவில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அனைத்து பூஜை மண்டபங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.இந்த ஆண்டு அமைதியான பூஜை விழாவை உறுதி செய்வதற்காக தன்னார்வலர்கள் திருவிழாவின் போது மண்டபங்களைப் பாதுகாப்பார்கள்.
மேலும் பூஜையையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். நடமாடும் நீதிமன்றங்களும் உடனடியாக குற்றவாளிகளை கையாள்வதற்காக செயல்படும் என்றும் மந்திரி கூறினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பூஜையில் சிலர் சில குர்ஆன் நகலை பூஜை மண்டபத்தில் வைத்தது போன்ற செயல்களை தவிர்க்கும் வகையிலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமரா உதவிகரமாக இருக்கும் என அவர் கூறினார்.