பெங்களூருவை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்; அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உத்தரவு
|பெங்களூருவை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நேற்று பெங்களூருவில் திடீரென நகர்வலம் மேற்கொண்டார். தொட்டபிதரகல்லு, சீகேஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்குகள் மற்றும் இந்திரா உணவகங்களை அவர் நேரில் பார்வையிட்டார். இந்திரா உணவகத்தில் அவர் உணவு சாப்பிட்டார். அதன் பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் இன்று (நேற்று) அதிகாரிகளுக்கு சொல்லாமல் நான் நகர்வலம் மேற்கொண்டேன். இந்திரா உணவகம், திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளை நேரில் பார்வையிட்டேன். இந்திரா உணவகத்தின் செயல்பாடுகளை நேரில் கண்டேன். அரசு நிறுவனங்கள் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதாக சொன்ன நிறுவனங்கள் அந்த வேலையை செய்யவில்லை. இந்த கிடங்குகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை. பெங்களூருவை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி இருப்பதை கண்டேன். குப்பைகளை கொண்டு வந்து சாலையோரங்களில் போடுவதை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
குப்பை கழிவுகள் மறுசுழற்சி செய்யும் கணக்கு விவரங்கள் சரியாக இல்லை. அதை சரிசெய்வோம். திடக்கழிவு மேலாண்மை கிடங்குக்கு வரும் குப்பை லாரிகளை வீடியோ எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். இந்திரா உணவகங்களில் விலை அதிகமாக பெறுகிறார்கள். இதுகுறித்து புகார் செய்வதற்கான உதவி மையங்களும் சரியாக செயல்படவில்லை என்று அறிந்தேன். இந்த தவறுகளை சரிசெய்வோம்.
பெங்களூருவில் வரி வருவாய் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குமாரசாமியின் "பென் டிரைவ்" விவகாரத்தில் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். இதுகுறித்து வரும் நாட்களில் பேசுகிறேன். ஜெயின் மத துறவி கொலையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தூண்டிவிடும் பணியை செய்யக்கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.