பெங்களூரு சம்பவம்; பெண்ணை கொலை செய்தது ஏன்...? குற்றவாளியின் டைரியில் அதிர்ச்சி தகவல்
|பெங்களூரு பெண் படுகொலை வழக்கு விசாரணையில், முக்தி, சசிதர் மற்றும் சுனில் ஆகிய சக பணியாளர்கள் 3 பேருடன் மகாலட்சுமி தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் மல்லேஸ்வரா பகுதியில் வீராண பவன் பகுதியருகே வியாளிகாவல் என்ற இடத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து சில நாட்களுக்கு முன் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அந்த பகுதியருகே வசித்தவர்கள் இதுபற்றி போலீசிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அந்த குடியிருப்பின் உள்ளே இருந்த பிரிட்ஜ் ஒன்றில் இளம்பெண்ணின் உடல் இருப்பது தெரிய வந்தது. அந்த உடல் 59 துண்டுகளாக்கப்பட்டு இருந்தது. விசாரணையில், அந்த பெண் மகாலட்சுமி (வயது 29) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் பெண்ணை படுகொலை செய்தது, அவருடன் பணிபுரிந்த முக்தி ரஞ்ஜன் ராய் என்பது உறுதியானது. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த டைரி குறிப்பு போலீசாருக்கு கிடைத்து உள்ளது.
அந்த டைரியில், என்னுடைய காதலி மகாலட்சுமியை செப்டம்பர் 3-ந்தேதி கொலை செய்தேன் என தெரிவித்து இருக்கிறார். சம்பவத்தன்று அவர் மகாலட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார். அதுபற்றிய குறிப்பில், அவளின் நடத்தையால் விரக்தியடைந்து விட்டேன். தனிப்பட்ட விசயங்களுக்காக அவளுடன் சண்டை போட்டேன். அப்போது மகாலட்சுமி என்னை தாக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவளை கொலை செய்து விட்டேன் என அதில் குறிப்பிட்டு உள்ளார்.
அவரை கொலை செய்த பின்னர், உடலை 59 துண்டுகளாக்கி பிரிட்ஜில் வைத்து விட்டேன். அவளுடைய நடத்தையால் எரிச்சலடைந்த நான் இந்த கொலையை செய்தேன் என்று டைரியில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வழக்கின் விசாரணையில், முக்தி, சசிதர் மற்றும் சுனில் ஆகிய சக பணியாளர்கள் 3 பேருடன் மகாலட்சுமி தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். இதில், முக்தி தவிர 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதுடன், அஷ்ரப் என்ற நெருங்கிய தோழரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. எனினும், முக்தியும், மகாலட்சுமியும் கடைசியாக கடந்த 1-ந்தேதி வேலையில் இருந்தபோது, ஒன்றாக காணப்பட்டனர்.
இதனால், முக்தியை நோக்கி போலீசாரின் விசாரணை கோணம் சென்றது. முக்கிய குற்றவாளியான முக்தி மேற்கு வங்காளத்திற்கு தப்பி சென்றுள்ளார். அவர் குடும்ப நபர் ஒருவரிடம் மகாலட்சுமி கொலை பற்றிய விவரங்களை கூறியிருக்கிறார். அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது, ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள பண்டி கிராமத்தில் மரம் ஒன்றில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்ட விவரம் போலீசுக்கு தெரிய வந்தது.
இதில், மகாலட்சுமியின் குடும்பம் நேபாளத்தில் உள்ளது. ஆனால், அவர் பெங்களூருவில் பல ஆண்டுகளாக வசித்து வந்திருக்கிறார். அவருக்கு ஹேமந்த் தாஸ் என்ற கணவர் மற்றும் 4 வயதில் மகள் ஒருவரும் உள்ளனர்.
எனினும், 9 மாதங்களாக அவர்கள் தனித்து வாழ்ந்து வருகின்றனர். வேறொருவருடன் அவருக்கு உள்ள தொடர்பு பற்றி அறிந்ததும், கணவர் சண்டை போட்டு பிரிந்திருக்கிறார். எனினும், மகளை பார்க்க அவ்வப்போது கணவரின் மொபைல் போன் கடைக்கு சென்று பார்த்து வந்திருக்கிறார்.
கடைசியாக 2-ந்தேதி அவரை குடும்பத்தினர் சந்தித்திருக்கின்றனர். மகாலட்சுமியின் தாயார் மீனா ராணா (வயது 58) என்பவரை பக்கத்து வீட்டுக்காரர்கள் தொடர்பு கொண்டு துர்நாற்றம் பற்றிய விவரங்களை கூறிய பின்னரே அவர் வந்து பார்த்ததும் கொடூர கொலை சம்பவம் பற்றி தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மகாலட்சுமியின் கணவரை தொடர்பு கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் கணவருக்கு உள்ள தொடர்பு பற்றியும் போலீசுக்கு சந்தேகம் எழுந்தது. ஆனால், அவருக்கு இதில் தொடர்பு இல்லை என தெரிய வந்தது.
டெல்லியில் 2022-ம் ஆண்டு ஷ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண் அவருடைய காதலர் அப்தப் அமீன் பூனாவாலா (வயது 29) என்பவரால் கொலை செய்யப்பட்டார். வாக்கரின் உடலை 35 துண்டுகளாக ஆக்கி குடியிருப்பு பகுதிக்கு அருகே பூனாவாலா வனப்பகுதியில் வீசி சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் நடந்துள்ள சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.