பெங்களூரு வெடிகுண்டு வழக்கு; குற்றவாளி பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிப்பு
|தொப்பி, முக கவசம் மற்றும் கண்ணாடிகளை அணிந்தபடி, கபேக்குள் முக்கிய குற்றவாளி நுழையும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில், ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில், ஐ.டி.பி.எல். ரோட்டில் ராமேஸ்வரம் கபே என்ற பெயரில் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த 1-ந்தேதி மதியம் 12.55 மணியளவில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன.
இந்த சம்பவத்தில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி கர்நாடக போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், சக்தி வாய்ந்த வெடிகுண்டு வழியே இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என தெரிய வந்தது.
இதன்பின்னர் இந்த வழக்கு விசாரணையானது, தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) இந்த வாரம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், முக்கிய குற்றவாளி பற்றிய தகவல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில், வெடிகுண்டு வைத்த சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும் என என்.ஐ.ஏ. இன்று அறிவித்து உள்ளது.
இதுபற்றி என்.ஐ.ஏ. தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், சந்தேகத்திற்குரிய நபர் தொப்பி, முக கவசம் மற்றும் கண்ணாடிகளை அணிந்தபடி காணப்படுகிறார். அவர் அந்த கபேக்குள் நுழையும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அந்த மர்ம நபர் பற்றிய தகவல்களை அளிப்பதற்காக, தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவற்றையும் என்.ஐ.ஏ. பகிர்ந்துள்ளது. அதில், அவரை பற்றிய தகவலை பொதுமக்கள் அனுப்பலாம். தகவல் அளிப்பவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்று என்.ஐ.ஏ. உறுதி அளித்து உள்ளது.