< Back
தேசிய செய்திகள்
தொழிற்சாலை மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; தார்வார், மைசூரு, பெலகாவி உள்பட 11 மாவட்டங்களில் முழு அடைப்பு
தேசிய செய்திகள்

தொழிற்சாலை மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு; தார்வார், மைசூரு, பெலகாவி உள்பட 11 மாவட்டங்களில் முழு அடைப்பு

தினத்தந்தி
|
23 Jun 2023 3:05 AM IST

கர்நாடகத்தில் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தார்வார், மைசூரு, பெலகாவி உள்பட 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி தார்வார், மைசூரு, பெலகாவி உள்பட 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன.

மின் கட்டண உயர்வு

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், இலவச மின்சார திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. ஆகஸ்டு 1-ந்தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் வீடுகள், சிறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டு இருந்தது. வீடுகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் மின்வாரிய அலுவலகம் முன்பாக பொதுமக்கள் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதுபோல், தொழில்துறை மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து மாநில வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பு சார்பில் வடகர்நாடக மாவட்டங்கள், மத்திய கர்நாடக மாவட்டங்களில் ஜூன் 23-ந் தேதி (அதாவது நேற்று) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

11 மாவட்டங்களில் மூடல்

அதாவது வடகர்நாடகம் மற்றும் மத்திய கர்நாடகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இந்த முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தொழில்வர்த்தக சபை நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று தார்வார், பெலகாவி, கலபுரகி, உத்தரகன்னடா, பீதர், விஜயாப்புரா, விஜயநகர், பல்லாரி, யாதகிரி மைசூரு, ஹாவேரி ஆகிய 11 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அந்த 11 மாவட்டங்களிலும் உள்ள சிறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. பெலகாவி, தார்வார் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாக வியாபாரிகளும் கடைகளை அடைத்திருந்தார்கள். பெலகாவியிலும், தார்வாரிலும் மார்க்கெட்டுகள் கூட அடைக்கப்பட்டு இருந்தன. எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் பெலகாவியில் இருக்கும் ரவிதாரா பேட்டை மார்க்கெட் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

தொழில்அதிபர்கள் போராட்டம்

பல்லாரி டவுனில் பெரும்பாலான கடைகள், தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. கலபுரகி, விஜயநகர், பீதர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொழிற்பேட்டை பகுதிகளில் இருந்த தொழிற்சாலைகள் அனைத்தும் மூடிக்கிடந்தன. முழு அடைப்பு நடைபெற்ற 11 மாவட்டங்களிலும் வியாபாரிகள், தொழில் நிறுவன அதிபர்கள் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி முக்கிய பகுதிகளில் பேரணியாக வந்து போராட்டம் நடத்தினார்கள்.

மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது. 11 மாவட்டங்களிலும் வழக்கம் போல் பஸ், ஆட்டோக்கள் ஓடியது. பள்ளி, கல்லூரிகள் எப்போதும் போல் திறக்கப்பட்டு இருந்தது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிறு தொழில் நிறுவனங்களில் இருந்து பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்ததால் பெரும் பாதிப்பு உண்டானது.

ஒரு வாரத்தில் ஆலோசனை

அதே நேரத்தில் மைசூரு மாவட்டத்தில் ஓட்டல்கள் திறக்கப்பட்டு இருந்தது. பெங்களூரு, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கையில் கருப்பு துணி கட்டிக்கொண்டு பணியாற்றினார்கள். ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டையான பெங்களூரு பீனியாவில் ஒரு சில தொழில் நிறுவனங்கள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து நிறுவனங்களை அடைத்திருந்தார்கள்.

ஆனால் பெரும்பாலான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்தமாக மின் கட்டண உயர்வை கண்டித்து நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு 11 மாவட்டங்களிலும் ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து, கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பு சேர்ந்தவர்களுடன் இன்னும் ஒரு வாரத்திற்குள் முதல்-மந்திரி சித்தராமையா, மின்சாரத்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

உற்பத்தி செலவு அதிகம்

இந்த ஆலோசனை கூட்டத்தில் மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் மாநிலம் முழுவதும் தொழில் நிறுவனங்களை மூடி போராட்டத்தை தீவிரப்படுத்தவும் கர்நாடக வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆன நிலையில் மின் கட்டண உயர்வை காரணம் காட்டி தொழில் நிறுவனங்கள் நடத்திய போராட்டம் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே நேரத்தில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் தொழிற்பேட்டைகளுக்கு விதிக்கப்படும் மின் கட்டணம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் மாநிலத்தில் மின் கட்டணத்துடன், மின் கட்டண வரி அதிகமாக இருப்பதால் தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகமாகி விட்டதாகவும், அதனால் வீதியில் இறங்கி போராடி வருவதாகவும் தொழில்அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்