எடியூரப்பாவை கைது செய்ய தடை; தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நீதி வழங்கப்படுகிறது - மெகபூபா முப்தி விமர்சனம்
|நீதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வழங்கப்படுகிறது என்பது தெளிவாகி இருக்கிறது என மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா. இவர் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். இதனிடையே, எடியூரப்பா தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக மார்ச் 14ம் தேதி எடியூரப்பா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேவேளை, எடியூரப்பா மீது புகார் அளித்த சிறுமியின் தாயார் நுரையீரல் பாதிப்பால் கடந்த மாதம் உயிரிழந்தார்.
இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் எடியூரப்பாவுக்கு பெங்களூரு செசன்சு கோர்ட்டு கடந்த 13-ந்தேதி பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனால், எடியூரப்பாவை சி.ஐ.டி. விசாரணை அமைப்பு எந்த நேரத்திலும் கைது செய்யும் சூழ்நிலை உருவான நிலையில், எடியூரப்பாவை கைது செய்ய கர்நாடக ஐகோர்ட்டு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் எடியூரப்பாவை கைது செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் நீதி வழங்கப்படுகிறது என்பது தெளிவாகியுள்ளது என ஜம்மு காஷ்மிர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பா.ஜ.க.வைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பாவை போக்சோ வழக்கில் கைது செய்ய கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் என்றும், அவர் எங்கும் செல்லப்போவதில்லை என்றும் கூறியிருப்பது, இதைவிட குறைந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் மற்றும் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் வழக்குகள் கையாளப்பட்ட விதத்திற்கு மாறாக உள்ளது. நீதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் வழங்கப்படுகிறது என்பதை இது வெளிப்படுத்துகிறது."
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.