< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை; விரைவில் அமலாகிறது
தேசிய செய்திகள்

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை; விரைவில் அமலாகிறது

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

பெங்களூரு:

விபத்துகள்

பெங்களூரு-மைசூரு இடையே 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதம் திறந்து வைத்தார். இவற்றில் 6 வழிச்சாலை சுங்க கட்டண சாலையாக உள்ளது. அதன் இருபுறத்திலும் தலா 2 வழிச்சாலை கட்டணம் இல்லாத சர்வீஸ் சாலையாக உள்ளது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்த மூன்றே மாதங்களில்

500-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் அந்த சாலையில் வாகனங்களை இயக்குவோர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான உத்தரவு இன்னும் 10 நாட்களில் பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 சுங்கச்சாவடிகள்

இதற்கிடையே அந்த விரைவுச்சாலையில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணா கே.ஷெட்டிஹள்ளியில் புதிதாக ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி நாளை (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் 2 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன்களுக்கு கட்டணம் ரூ.155, இருவழிக்கு ரூ.235, சாதாரண சரக்கு வாகனங்கள், மினி பஸ்களுக்கு ரூ.250-ரூ.375, பெரிய சரக்கு லாரிகள், பஸ்களுக்கு ரூ.525-ரூ.790, மூன்று ஜோடி சக்கரம் கொண்ட சரக்கு லாரிகளுக்கு ரூ.575-ரூ.860,6 ஜோடி சக்கரம் கொண்ட சரக்கு லாரிகளுக்கு ரூ.825-ரூ.1,240,7 ஜோடி சக்கரத்திற்கு மேல் உள்ள சரக்கு லாரிகளுக்கு ரூ.1,005-ரூ.1,510 கட்டணம் உள்ளது.

மேலும் செய்திகள்