< Back
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை -  கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

தினத்தந்தி
|
9 Feb 2024 3:54 PM IST

பஞ்சு மிட்டாயில் தடைசெய்யப்பட்ட ரோடமைன் பி எனப்படும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியின் கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதுச்சேரி கடற்கரை சாலையில் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி, ஆய்வகத்தில் பரிசோதனை செய்தனர். அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது, அந்த பஞ்சுமிட்டாயில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட ரோடமைன் பி எனப்படும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரசாயனம் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை, இதனை சிறு குழந்தைகள் உண்ணும்போது எளிதாக புற்றுநோய் பாதிக்க பெரும் அளவில் வாய்ப்பு உள்ளது என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனையை தடை செய்ய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை முறையாக அணுகி தரச்சான்று பெற்று பஞ்சு மிட்டாய் விற்பனையை தொடங்கலாம், இதனை மீறுபவர்கள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்