< Back
தேசிய செய்திகள்
நாடு முழுவதும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை:  மத்திய மந்திரி ஜோஷி
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை: மத்திய மந்திரி ஜோஷி

தினத்தந்தி
|
7 Sept 2023 4:07 PM IST

நாடு முழுவதும் வறட்சியால் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என சித்தராமையாவுக்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பதிலளித்து உள்ளார்.

ஹுப்ளி,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துமகூரு மாவட்டத்தில் மதுகிரி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று பேசும்போது, அன்ன பாக்கிய திட்டத்திற்காக, இந்திய உணவு கழகத்திடம் நாங்கள் கடிதம் எழுதி இருந்தோம். அரிசியை அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய இருந்தோம். அவர்களும் அரிசியை வழங்க தயாராக இருக்கிறோம் என உறுதி அளித்து இருந்தனர்.

ஒரு கிலோவுக்கு ரூ.36 வரை பணம் கொடுக்க நாங்கள் தயாராகவே இருந்தோம். ஆனால், எங்களுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. பா.ஜ.க. ஏழைகளுக்கு ஆதரவானவர்களா? இல்லை. அவர்கள் ஏழைகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை. நாங்கள் அரிசியை இலவசத்திற்கு கேட்கவில்லை.

அதனால், அவர்கள் எவ்வளவு கேடானவர்கள், தீயவர்கள் என நீங்களே முடிவு செய்ய வேண்டும். அவர்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள். அவர்கள் இரக்கமற்றவர்களாக உள்ளனர் என குற்றச்சாட்டாக கூறினார்.

இந்த நிலையில் மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி இதற்கு பதிலளிக்கும் வகையில், இன்று கூறும்போது, சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மோடியை தீயவர் என கூற முயற்சித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர் என்பதனால், பிரதமர் மோடியின் தலைமை மீது காங்கிரஸ் கட்சிக்கு பொறாமையாக உள்ளது. அது காந்தி குடும்பத்தின் சொத்து என அவர்கள் நினைக்கின்றனர்.

ஒட்டு மொத்த நாடும் வறட்சியை சந்தித்து வருகிறது. நம்மிடம் குறைந்த அளவே அரிசி இருப்பு உள்ளது. அதனாலேயே நாங்கள் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து இருக்கிறோம். அரிசி விலையும் உயர்ந்து வருகிறது.

பா.ஜ.க. ஆள கூடிய பல மாநில அரசுகளும் அரிசி வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், எங்களிடம் தற்போது அரிசி இல்லை என்று கூறியுள்ளார். தீயவர் என்ற வார்த்தையை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி இருப்பது, அவர்களுடைய செருக்கை காட்டுகிறது என்றும் ஜோஷி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்