5 நகரங்களில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டிற்கு தடை
|கர்நாடகத்தில் 5 நகரங்களில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக வனத்துறை மந்திரி ஈஸ்வரர் கன்ட்ரே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
வனம் சுற்றுச்சூழல் துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வெள்ளம் உண்டாகிறது
எங்கள் காங்கிரஸ் அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது. கர்நாடகத்தில் 5 நகரங்கள், ஒரு முறை மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நகரங்களாக மாற்றப்படும். அங்கு பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கலபுரகி, பீதர் ஆகிய நகரங்கள் வட கர்நாடகத்தை சேர்ந்தவை ஆகும்.
இந்த பிளாஸ்டிக் நீரில் கரையாது. மண்ணோடு மண்ணாக மக்குவது இல்லை. இது மண்ணை விஷமாக மாற்றுகிறது. இதனால் இவற்றை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். இந்த பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிகிறார்கள். இதனால் மழைநீர் கால்வாய்களில் சேர்ந்து தண்ணீரை தடுக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் உண்டாகிறது.
பசுமை மாநிலம்
பிளாஸ்டிக் பைகளில் உணவு கழிவு பொருட்களை நிரப்பி போடுவதால் அவற்றை கால்நடைகள் சாப்பிடுகின்றன. இதனால் அந்த கால்நடைகளும் இறக்க நேரிடுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தீவைத்து எரிப்பவர்களும் இருக்கிறார்கள். அதில் இருந்து வெளியேறும் புகை ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பிளாஸ்டிக் தடை செய்யப்படும் நகரங்களில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு என அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் மாநிலத்தில் 5 கோடி மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளோம். இதனால் கர்நாடகம் பசுமை மாநிலமாக மாற்றப்படும். இதில் இதுவரை 60 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இவற்றை பாதுகாத்து மரம் ஆகும் வரை கண்காணிக்கப்படும். இந்த ஆண்டு முழுவதும் மரக்கன்று நடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
வனப்பகுதி
கல்யாண கர்நாடக பகுதியில் பல்லாரி, விஜயநகர் மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 5 மாவட்டங்களில் வனப்பகுதி 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. அதனால் அந்த பகுதியில் பசுமை பகுதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஈஸ்வர் கன்ட்ரே கூறினார்.