சுதந்திர தினத்தையொட்டி பாலிதீன் தேசிய கொடிகளை பயன்படுத்த தடை
|சுதந்திர தினத்தையொட்டி பாலிதீன் தேசிய கொடிகளை பயன்படுத்த கூடாது என பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திரதினத்தையொட்டி வீடுகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, பெங்களூருவில் சுதந்திர தினத்தையொட்டி 15 லட்சம் தேசிய கொடிகளை ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 10 லட்சம் தேசிய கொடிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று மேலும் 5 லட்சம் தேசிய கொடிகள் வழங்கப்படும். சுதந்திர தினத்தன்று பெங்களூருவில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்காக மாநகராட்சி மூலமாகவே இந்த முறையும் தேசிய கொடி விற்கப்படுகிறது. எக்காரணத்தை கொண்டும் பிளாஸ்டிக்(பாலிதீன்) தேசிய கொடி பயன்படுத்த அனுமதி இல்லை. பெங்களூருவில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்காகவும், மக்களிடையே சுதந்திர தினம், தேசிய கொடி ஏற்றுவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சிறப்பு கமிஷனர் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.