< Back
தேசிய செய்திகள்
ஸ்கூட்டர் உதவியால் கட்டிட உச்சிக்கு கொண்டு செல்லப்படும் சிமெண்ட் மூட்டைகள்; வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா
தேசிய செய்திகள்

ஸ்கூட்டர் உதவியால் கட்டிட உச்சிக்கு கொண்டு செல்லப்படும் சிமெண்ட் மூட்டைகள்; வீடியோவை பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா

தினத்தந்தி
|
6 Dec 2022 9:32 PM IST

கட்டுமான பணிக்கு தேவையான சிமெண்ட் மூட்டைகளை ஸ்கூட்டரை பயன்படுத்தி கட்டிட உச்சிக்கு கொண்டு செல்லும் கண்டுபிடிப்பை தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் பாராட்டி உள்ளார்.



புதுடெல்லி,


சமூக வலைதளத்தில் காண கிடைக்கும் ஈர்க்க கூடிய விசயங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பகிர்வது வழக்கம். அவற்றில் பல ஊக்கமளிக்கும் மற்றும் நகைச்சுவையான விசயங்களும் அடங்கி இருக்கும்.

இதற்காகவே அவரை 1 கோடி பேர் டுவிட்டரில் பின்தொடருகின்றனர். அந்த வகையில் தற்போது அவர் வீடியோ ஒன்றுடன் புதிய பதிவொன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில், கட்டுமானம் நடைபெறும் தளத்திற்கு அருகே ஸ்கூட்டர் ஒன்றில் ஒரு நபர் அமர்ந்து இருக்கிறார். புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு தேவையான சிமெண்ட் மூட்டைகள் கீழிருந்து மேலே கொண்டு செல்லப்படும் காட்சிகள் தெரிகின்றன.

இந்த மூட்டைகள் மேலே செல்வதற்கு ஏற்ற வகையில் ஸ்கூட்டர் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதும் வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. கயிற்றின் ஒரு முனை ஸ்கூட்டரில் உள்ள இயந்திரத்துடன் இரும்பு தடி வழியே இணைக்கப்பட்டு உள்ளது.

கயிற்றின் மற்றொரு முனை சிமெண்ட் மூட்டையை தூக்கும் பகுதியில் உள்ளது. அதில், கட்டிடத்தின் மேல்பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிக்கு தேவையான மூட்டைகள் கட்டி, கொண்டு செல்லப்படுகின்றன.

ஆட்கள் பற்றாக்குறை, கூலி உள்ளிட்ட பல விசயங்களை மையப்படுத்தி, சிமெண்ட் மூட்டைகளை ஸ்கூட்டரின் இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கட்டிடத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் இந்த கண்டுபிடிப்பை அவர் பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், வாகனங்களில் உள்ள இயந்திரங்களின் ஆற்றலை பயன்படுத்த பல வழிகள் உள்ளன. அதனாலேயே, அவற்றை நாம் ஆற்றல் ரெயில்கள் என அழைக்கிறோம்.

இதுவே, மலிவான விலையில் மின் ஸ்கூட்டர் கிடைக்கும்போது, இந்த ஆற்றல் பயன்பாடு முழு அளவில் இன்னும் சிறப்படையும் என அவர் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்