உ.பி.யில் தனியார் பள்ளியின் பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயம்
|மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 40 குழந்தைகளில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலை வழக்கம்போல செயல்பட்டு வந்த அந்த பள்ளியின் பால்கனி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 முதல் 15 வயதுக்குட்பட்ட 40 குழந்தைகள் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்த குழந்தைகளை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 40 குழந்தைகளில் 5 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
இந்த தனியார் பள்ளியில் காலை நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்துக்காக பெருமளவிலான மாணவர்கள் முதல் மாடி பால்கனியில் கூடியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.