மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
|அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மறுப்பதாக கூறி, டெல்லி கோர்ட்டில் கெஜ்ரிவாலுக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
டெல்லியில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அமலாக்கத்துறை டெல்லி முன்னாள் துணை மந்திரி மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தது.
இந்த மதுபான கொள்கை முறைகேட்டில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்து, எட்டுமுறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சம்மனை ஏற்று கெஜ்ரிவால் ஒருமுறை கூட ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார்.
இதற்கிடையே, கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஏற்று கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜரானர். கெஜ்ரிவால் ஆஜரானதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.