< Back
தேசிய செய்திகள்
பகுஜன் சமாஜ் எம்.பி.யை அநாகரிகமாக பேசிய விவகாரம்: நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் பரிந்துரை
தேசிய செய்திகள்

பகுஜன் சமாஜ் எம்.பி.யை அநாகரிகமாக பேசிய விவகாரம்: நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் பரிந்துரை

தினத்தந்தி
|
29 Sept 2023 5:41 AM IST

டேனிஷ் அலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்கள் சிலரும் சபாநாயருக்கு கடிதம் எழுதினர்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, மக்களவையில் பேசிய பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலியை, பா.ஜனதா எம்.பி. ரமேஷ் பிதுரி அநாகரிகமாக பேசினார்.

இது எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அரசும் வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இது தொடர்பாக ரமேஷ் பிதுரிக்கு விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீசும் அனுப்பி இருந்தது.

சக எம்.பி.யை அநாகரிகமாக பேசிய ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினர்.

அதேநேரம் டேனிஷ் அலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி நிஷிகாந்த் துபே உள்ளிட்ட பா.ஜனதா எம்.பி.க்கள் சிலரும் சபாநாயருக்கு கடிதம் எழுதினர்.

இந்த மனுக்களை ஆய்வு செய்த ஓம் பிர்லா, தற்போது அவற்றை நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைத்து விசாரிக்குமாறு பரிந்துரைத்துள்ளார். பா.ஜனதா எம்.பி. சுனில் குமார் சிங் தலைமையிலான இந்த குழு, இது குறித்து விசாரிக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்காக நிஷிகாந்த் துபே எம்.பி. நன்றி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்