< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் தசரா விழாவுக்காக வந்த லட்சுமி யானை குட்டி ஈன்றது
தேசிய செய்திகள்

மைசூருவில் தசரா விழாவுக்காக வந்த லட்சுமி யானை குட்டி ஈன்றது

தினத்தந்தி
|
14 Sep 2022 4:28 PM GMT

மைசூருவில் தசரா விழாவுக்காக வந்த லட்சுமி யானை குட்டி ஈன்றுள்ளது.

மைசூரு:

மைசூருவில் தசரா விழாவுக்காக வந்த லட்சுமி யானை குட்டி ஈன்றுள்ளது.

மைசூரு தசரா விழா

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் அடுத்த மாதம் 5-ந் தேதி விஜயதசமி அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக 14 யானைகள் பல்வேறு யானைகள் முகாம்களில் இருந்து வரவழைக்கப்பட்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளன.

அதில் 26 வயதான 'லட்சுமி' என்ற பெண் கும்கி யானையும் அடங்கும். இந்த யானை நாகரஒலே வனப்பகுதியில் உள்ள யானைகள் முகாமில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்டு இருந்தது.

லட்சுமி யானை

'லட்சுமி' யானை ஏற்கனவே 2 முறை தசரா ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்டு இருந்தது. ஆனால் அதில் ஒருமுறைதான் அந்த யானை தசரா ஊர்வலத்தில் பங்கேற்று இருந்தது. தற்போது 3-வது முறையாக அந்த யானை அழைத்து வரப்பட்டு இருக்கிறது. மைசூருவுக்கு அழைத்து வரப்பட்ட உடன் லட்சுமி யானை கர்ப்பமாக இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அது வழக்கமான நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் குட்டியை ஈன்றும் நிலையில் இருந்ததால் உடனடியாக தனியாக வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியில் இருந்து லட்சுமி யானை ஆக்ரோஷமாக காணப்பட்டது. அது பிளிறியபடி அங்கும், இங்குமாக அசைந்து கொண்டே இருந்தது. அதை ஆசுவாசப்படுத்த பாகன் முயன்றும் அது பலனளிக்கவில்லை. இதனால் இதுபற்றி மாவட்ட வன அலுவலக கரிகாலன், கால்நடை டாக்டர் நாகராஜ் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து லட்சுமி யானையை பரிசோதித்தனர்.

குட்டி ஈன்றது

அப்போது அது குட்டியை ஈனும் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் லட்சுமி யானையை மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள கோட்டைக்குள் அழைத்துச் சென்று தனியாக விட்டிருந்தனர். மேலும் அதற்கு மருந்துகளையும் கொடுத்தனர். இதையடுத்து லட்சுமி யானை தும்பிக்கையால் தன் மீது மண்ணை வாரி இறைத்தபடி பிளிறிக்கொண்டும், அங்கும் இங்குமாக அசைந்து கொண்டும் இருந்தது.

இந்த நிலையில் இரவு 8.30 மணிக்கு லட்சுமி யானை குட்டி ஈன்றது. அது ஆண் குட்டி ஆகும். தற்போது லட்சுமி யானையும், குட்டி யானையும் ஆரோக்கியமாக இருப்பதாக கால்நடை டாக்டர் நாகராஜ் தெரிவித்தார்.

மன்னர் குடும்பத்தினர் மகிழ்ச்சி

குட்டி ஈன்றதால் இந்த ஆண்டு தசரா ஊர்வலத்தில் லட்சுமி யானை பங்கேற்காது என்றும், தசரா விழா முடியும் வரை அந்த யானை தனது குட்டியுடன் கோட்டைக்குள்ளேயே இருக்கும் என்றும் அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதற்கு நடைபயிற்சி உள்பட எந்தவித பயிற்சியும் அளிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. லட்சுமி யானை குட்டி ஈன்றதால் மைசூரு மன்னர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் கர்ப்பமாக இருந்த அந்த யானையை ஏன் தசரா விழாவுக்கு அழைத்து வந்தீர்கள் என வனத்துறையினரை கேள்வி கேட்டு அவர்கள் கடிந்து கொண்டனர். தற்போது பிறந்துள்ள குட்டியானை லட்சுமி யானைக்கும், அர்ஜூனா யானைக்கும் பிறந்திருப்பதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்