பம்பைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கோரி எருமேலியில் அய்யப்ப பக்தர்கள் சாலை மறியல்
|வாகனங்களை பம்பைக்கு செல்ல அனுமதிக்கக்கோரி எருமேலி பாதையில் அய்யப்ப பக்தர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலை,
மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. சபரிமலையில் அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளுக்குநாள் கூட்டம் அதிகரிப்பதால் பம்பைக்கு பக்தர்களின் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பக்தர்களின் வாகனங்களை பம்பைக்கு செல்ல அனுமதிக்கக்கோரி நேற்று இரவு ரான்னி எருமேலி பாதையில் அய்யப்ப பக்தர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பணியில் இருந்த போலீசார் பம்பையில் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே வாகனங்களை விட முடியும் என்று தெரிவித்தனர். அதைக் கேட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே ஏற்றமானூரில் இருந்தும் பக்தர்கள் சபரிமலை செல்ல போலீசார் தடை விதித்து வருகிறார்கள். இதனால் பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சபரிமலையில் தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 12 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.