ராகுல் காந்தி வசிப்பதற்கு அயோத்தி கோவிலில் இடம் தயார் - சாமியார் அழைப்பு
|அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளநிலையில் ராகுல் காந்தி வசிப்பதற்கு அயோத்தி கோவிலில் இடம் தயார் என சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தி,
எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி, அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் தங்கள் வீட்டை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர்.
இந்த வரிசையில் அயோத்தி அனுமன்கார்கி கோவில் பூசாரி சஞ்சய் தாசும் கோவிலில் உள்ள தனது வசிப்பிடத்தை ராகுல் காந்திக்கு வழங்கலாம் என தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அயோத்தியை சேர்ந்த சாமியார்களாகிய நாங்கள், இந்த புனித நகருக்கு ராகுல் காந்தியை வரவேற்கிறோம். அவர் தங்குவதற்கு எங்கள் இடத்தை வழங்குகிறோம்' என தெரிவித்தார்.
மேலும் அவர், 'ராகுல் காந்தி அயோத்திக்கு நிச்சயம் வரவேண்டும், அனுமன்கார்கி கோவிலில் வழிபட வேண்டும். இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆசிரமங்கள் உள்ளன. அதில் அவர் தங்க வேண்டும். அவர் வந்தால் வரவேற்போம்' என்றும் கூறினார்.