குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளில் சிறந்த செயல்பாட்டுக்காக நாமக்கல் மாவட்டத்துக்கு விருது
|குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளில் சிறந்த செயல்பாட்டுக்காக நாமக்கல் மாவட்டத்துக்கு விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி,
மத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை சார்பில் ஜல்ஜீவன் திட்டமும், தூய்மை இந்தியா திட்டமும் முனைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக செயல்படுத்தும் மாவட்டங்களுக்கு மாதாந்திர அடிப்படை, காலாண்டு அடிப்படை மற்றும் ஆண்டு அடிப்படையின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது மாதாந்திர விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் சிறப்பாக செயல்பட்ட மாவட்டங்களில் 100 சதவீதத்தை எட்டிய முதல் 3 மாவட்டங்களாக அரியானா மாநிலத்தின் மாவட்டங்கள் தேர்வு பெற்றுள்ளன. 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான பணிகளுக்கு தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும், 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையிலான பணிகளுக்கு தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டமும், 3-வது இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டன.
25 முதல் 50 சதவீத பணிகளுக்காக தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல் இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டது. 100 சதவீத பணிகளை முடித்ததற்காக நாமக்கல் மாவட்டம் விருது பெற்றது. விருதுகளை துறையின் செயலாளர் வினி மகாஜன் வழங்கினார்.
குடிநீர் மற்றும் துப்புரவு பணிகள் தொடர்பாக தேசிய அளவில் கலெக்டர்கள் மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்த முடிவு செய்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.