உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட விமானங்களுக்கான சிறப்பு எரிபொருள் "ஏவிஜிஏஎஸ் 100 எல்எல்" இன்று அறிமுகம்!
|ஏவிஜிஏஎஸ் 100 எல்எல் என்ற எரிபொருள் இதுவரை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஏவிஜிஏஎஸ் 100 எல் எல் என்ற எரிபொருள் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
பிஸ்டன் என்ஜின் வகை விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கான சிறப்பு எரிபொருளான "ஏவிஜிஏஎஸ் 100 எல் எல்" என்ற எரிபொருளை பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி இன்று அறிமுகம் செய்தார்.
அப்போது பேசிய அவர், "உயிரி எரிபொருள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் அறிமுகம் மூலம் நாம் எரிபொருள் இறக்குமதியை சார்ந்துள்ளது குறைந்து வருகிறது.
விமான நிலையங்கள், விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், எதிர்காலத்தில் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றுக்கு உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் ஏவிஜிஏஎஸ் 100 எல் எல், எரிபொருள் முக்கிய தேவையாக இருக்கும்" என்று கூறினார்.
ஆட்டொமோட்டிவ் கேசொலின் எனப்படும் வாகனங்களுக்கான எரிபொருள்(ஏவி கேஸ்) ரக எரிபொருளை தற்போது இந்தியா ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில்,உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஏவிஜிஏஎஸ் 100 எல் எல் என்ற எரிபொருள் மூலம், நாட்டில் அன்னிய செலாவணி சேமிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை எரிபொருளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும், முதல் எண்ணெய் சந்தை நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது.