நடுத்தர மக்களின் வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது...! எஸ்பிஐ ஆய்வில் தகவல்
|2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் ரூ.14.9 லட்சமாக உயரும் என எஸ்பிஐ ஆய்வு அறிக்கையில் தகவல் தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்திய ஆய்வு ஒன்றில் நடுத்தர மக்களின் வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிய வந்து உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வருமான வரி ரிட்டர்ன் தரவுகளின் அடிப்படையில், 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் ரூ.14.9 லட்சமாக உயரும். 2013ல் நடுத்தர மக்களின் சராசரி வருமானம் ரூ.4.4 லட்சமாக இருந்தது. 2022ல் 13 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் வருமானம் சுமார் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
நடுத்தர மக்களின் வருமானம் அதிகரிப்பதற்கான காரணங்கள் முதலில் லட்சக்கணக்கான வருமான வரி செலுத்துவோர் குறைந்த வருமானத்தில் இருந்து மேல் வருமானக் குழுவிற்கு மாறியுள்ளனர். 2வது ஜீரோ வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளது.
2011-ல் 1.6 கோடி பேர் வருமான வரி செலுத்திஉள்ளனர். இவர்களில் 84 சதவீத மக்களின் வருமானம் அப்போது ஆண்டுக்கு 5 லட்சமாக இருந்தது. 2022 நிதியாண்டில் 6.8 கோடி பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 64 சதவீதம் பேர் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம். அதாவது, 2011-12ல் 13.6 சதவீத மக்கள் குறைந்த வருமானத்தில் இருந்து நடுத்தர வருவாய் பிரிவிற்கு மாறியுள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் இதேபோல் தொடர்ந்து அதிகரித்தால், 2047 ஆம் ஆண்டில், இந்தியாவில் வரி செலுத்துவோர் வருமானம் 2022 நிதியாண்டில் ரூ.13 லட்சத்திலிருந்து 2047 நிதியாண்டில் சுமார் ரூ.49.9 லட்சமாக உயரும். அதே நேரத்தில், சராசரி தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.14.9 லட்சத்தை எட்டும்.
2047-ம் ஆண்டுக்குள் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். 2023ல் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8.5 கோடியாக இருந்தது, 2047ல் 48.2 கோடியாக உயரும்.
அது மட்டுமின்றி, ஜீரோ வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் 2047க்குள் சுமார் 25 சதவீதம் குறையும். அதாவது, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு என்பது நேரடியாக வருமான வளர்ச்சியைக் குறிக்கிறது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.