4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை; டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடக்கம்
|ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூப்பதன் எதிரொலியாக பெங்களூருவில் 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
பெங்களூரு:
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூப்பதன் எதிரொலியாக பெங்களூருவில் 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
கூடுதல் கட்டணம்
பெங்களூரு மக்களின் போக்குவரத்துக்கு உதவும் வகையில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ நிலையங்களில் இருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதற்கு மக்கள் ஆட்டோக்களை பயன்படுத்தும் வேளையில், அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, பெங்களூருவில் 4 முக்கிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் வருகிற டிசம்பவர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-
4 மெட்ரோ நிலையங்கள்
பெங்களூரு மெட்ரோவில் பயணிக்கும் மக்கள் பிற இடங்களுக்கு செல்வதற்கு ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் ஆட்டோக்களில் பெண்கள் பயணிப்பதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
அதனை கருத்தில் கொண்டு, பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் மற்றும் பெங்களூரு போக்குவரத்து போலீசாரால் 4 மெட்ரோ ரெயில் நிலையங்களில் முன்பதிவு ஆட்டோ சேவை தொடங்கப்பட உள்ளது.
டிசம்பர் 1-ந் தேதி முதல் இந்த சேவை தொடங்கும். நாகசந்திரா, பையப்பனஹள்ளி, பனசங்கரி, மெஜஸ்டிக் ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த சேவை முதற்கட்டமாக செயல்பாட்டுக்கு வர உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 1 மணி நேரத்திற்கு ஒரு போக்குவரத்து போலீசார், கவுண்ட்டர்களை வந்து பார்வையிடுவார்கள்.
வரவேற்பை பொருத்தே...
இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்தே அடுத்த கட்டமாக பெங்களூருவில் உள்ள மற்ற மெட்ரோ நிலையங்களில் இந்த சேவையை கொண்டு வர உள்ளோம்.
இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.