காட்டு யானை தாக்கி ஆட்டோ டிரைவர் பலி: குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்
|காட்டு யானை விரட்டி சென்று ஆட்டோவை மறித்து தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தியது.
மூணாறு,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள கன்னிமலை எஸ்டேட் டாப் டிவிஷன் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 46). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் இவர், மூணாறில் இருந்து தனது ஆட்டோவில் குழந்தை உள்பட 4 பேரை ஏற்றிக்கொண்டு கன்னிமலை எஸ்டேட் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கன்னிமலை பகுதியில் தேயிலை தோட்ட குடியிருப்பு அருகே ஆட்டோ சென்றது. அப்போது திடீரென சாலையின் குறுக்கே காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை ஆட்டோவை நோக்கி ஓடி வந்தது. இதைக்கண்டு பதற்றம் அடைந்த டிரைவர் மணி ஆட்டோவை பின்நோக்கி நகர்த்தினார். ஆனால் காட்டு யானை விரட்டி சென்று ஆட்டோவை மறித்து தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தியது.
இதில் ஆட்டோவில் வந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மணி மட்டும் ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓடினார். இதைக்கண்டதும் ஆக்ரோஷமான யானை அவரை துரத்தி சென்றது. அப்போது மணி தலைதெறிக்க ஓடியதில் கால்தவறி கீழே விழுந்தார். இதையடுத்து காட்டு யானை மணியை காலால் மிதித்து கொன்றது.
இதற்கிடையே அந்த வழியாக ஜீப்பில் சிலர் வந்தனர். அவர்கள் கூச்சல் போட்டு யானையை விரட்டினர். பின்னர் அவர்கள் ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த குழந்தை உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மூணாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மூணாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பின்னர் போலீசார், மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டு யானை தாக்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. பலியான மணிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வனத்துறை சார்பில், மணி குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்திற்கான நிவாரணம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். அப்போது மணி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாகவும் உறுதிமொழி அளித்தனர்.