ஆட்டோ டிரைவர் ரூ.600 கட்டணம் கேட்டதால் ஆஸ்பத்திரிக்கு நடந்தே சென்ற தந்தை-மகன்
|ஆட்டோ டிரைவர் ரூ.600 கட்டணம் கேட்டதால் ஆஸ்பத்திரிக்கு தந்தை-மகன் நடந்தே சென்ற சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று தனியார் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக தனியார் பஸ்கள், ஆட்டோ, வாடகை கார்கள் ஓடவில்லை. இந்த நிலையில், கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த அனுமந்த ரெட்டி என்பவர் தன்னுடைய மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால், பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக ரெயில் மூலமாக பெங்களூருவுக்கு வந்திருந்தார். ரெயில் நிலையம் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த சில ஆட்டோ டிரைவர்களிடம் விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று அனுமந்த ரெட்டி கேட்டுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் ரூ.600 முதல் ரூ.800 வரை கட்டணம் கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று அவர் கூறியும் மீட்டருக்கான கட்டணம் வாங்க ஆட்டோ டிரைவர்கள் முன் வரவில்லை. இதன் காரணமாக அனுமந்த ரெட்டியும், அவரது மகனும் ரெயில் நிலையத்தில் இருந்து விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு நடந்தே சென்றுள்ளனர். பெங்களூருவில் தனியார் வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பற்றி தனக்கு தெரியாது என்றும், 3½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.600 வரை கட்டணம் கேட்டதால், வேறு வழியின்றி தானும், மகனும் நடந்தே ஆஸ்பத்திரிக்கு வந்ததாகவும் அனுமந்த ரெட்டி கூறினார்.