< Back
தேசிய செய்திகள்
பெண் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது; முன்விரோதத்தில் தீர்த்து கட்டினார்
தேசிய செய்திகள்

பெண் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது; முன்விரோதத்தில் தீர்த்து கட்டினார்

தினத்தந்தி
|
28 Jun 2022 8:54 PM IST

பண்ட்வால் அருகே பெண் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். முன்விரோதத்தில் தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.

மங்களூரு;

பெண் கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா காபிக்காடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ். இவரது மனைவி சகுந்தலா(வயது 35). இவர், புத்தூரில் உணவகம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை சகுந்தலா தனது ஸ்கூட்டரில் புத்தூர் நோக்கி சென்றுள்ளார். பண்ட்வால் தாலுகா நெட்லமுத்னூர் அருகே நேரலக்கட்டே சந்திப்பு பகுதியில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரது ஸ்கூட்டரை, ஆட்டோ ஒன்று பின்தொடர்ந்து சென்றுள்ளது. பின்னர் சிறிதுநேரத்தில் ஸ்கூட்டரை, ஆட்டோவால் வழிமறித்த மர்மநபர், சகுந்தலாவை கத்தியால் சரமாரியாக குத்தி கொலைசெய்துவிட்டு தப்பிசென்றுவிட்டார்.

இந்த கொலை சம்பவத்தை அப்பகுதியில் இருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து போலீசாருக்கு அனுப்பி இருந்தார். இதுகுறித்து பண்ட்வால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடிவந்தனர்.

கைது

இந்த நிலையில் நேற்று சகுந்தலாவை கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர், புத்தூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பது தெரியவந்தது. இவர் தான் சம்பவத்தன்று ஸ்கூட்டரில் சென்ற சகுந்தலாவை ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்று கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது.

முன்விரோதம் காரணமாக சகுந்தலாவை தீர்த்து கட்டியதாக கூறப்படுகிறது. ஆனாலும் கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை. இதுதொடர்பாக கைதான ஸ்ரீதரிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்