கர்நாடகத்தில் இலவச பஸ் பயண திட்டத்தால் பாதிப்பு: ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் வருகிற 27-ந்தேதி வேலை நிறுத்தம்
|கர்நாடகத்தில் இலவச பஸ் பயண திட்டத்தால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அதன் சங்கங்கள் அறிவித்துள்ளன.
பெங்களூரு:
கர்நாடகத்தில் சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. நகர பஸ்கள் மட்டுமின்றி தொலைதூரம் செல்லும் புறநகர் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்கிறார்கள். இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்களின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு தங்களுக்கு உதவி செய்யுமாறு கோரி ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ் உரிமையாளர்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பஸ்கள், வாடகை கார்கள், ஆட்டோக்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. வருவாய் பாதிப்பு மட்டுமின்றி இழப்பும் ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்கள் டாக்சியை அனுமதிப்பதால் ஆட்டோக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசின் இலவச திட்டத்தால் நாங்கள் கடனை அடைக்க முடியவில்லை. காப்பீடு செலுத்த முடியவில்லை. வாழ்க்கையை நடத்துவதே கடினமாகிவிட்டது. இதனால் 23 வெவ்வேறு வகையான தனியார் போக்குவரத்து வாகன சங்கங்கள் இணைந்து நாங்கள் வருகிற 27-ந் தேதி வேலை நிறுத்தம் செய்கிறோம். அன்றைய தினம் ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.